முரட்டு வழி

முரட்டு வழி – வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ்

“The Use of Force” by William Carlos Williams

William Carlos Williams_Image Courtesy: Wikipedia

William Carlos Williams_
Image Courtesy: Wikipedia

அவர்கள் எனது புதிய நோயாளிகள்.என்னிடம் இருந்ததெல்லாம் ஆல்சன் என்ற பெயர் மட்டுமே. எவ்வளவு விரைவில் வரமுடியுமோ வாருங்கள். எனது மகள் மிகவும் நோயுற்றிருக்கிறாள் என்றார்கள்.
நான் அங்கு சென்ற பொழுது பெரிய உடம்புடன் பயந்த தோற்றம் கொண்ட சுத்தமான ஒரு பெண் வருத்தம் தோய்ந்த தொனியில் நீங்கள் தானா டாக்டர் எனக்கேட்டு என்னை உள்ளே வரச்சொன்னாள். அவள் மேலும் சொன்னாள்.
“மன்னிக்கவேண்டும் டாக்டர் நாங்கள் அவளை சமையலறையில் வைத்திருக்கிறோம். அங்கு கதகதப்பாய் இருக்கும். இங்கே சில சமயங்களில் ஈரமாக இருக்கும்”.
அந்தக் குழந்தை முழுமையாக உடையணிந்து தந்தையின் மடியில் சமையல் மேஜையருகே அமர்ந்திருந்தாள். எழுந்திருக்க முயன்ற அவரைத் தடுத்து, எனது மேல்கோட்டை கழற்றியபடியே அறையை நோட்டமிட்டேன். அவர்களெல்லாம் ரொம்பவும் பதற்றமடைந்து என்னை மேலும் கீழுமாக நம்பிக்கையின்றிப் பார்த்தனர். இது போன்ற சமயங்களில் எப்பொழுதும் போலவே அவர்கள் ஏற்கனவே சொன்னதைத்தவிர என்னிடம் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை. சொல்லவேண்டியது நான்தான். அதற்காகத்தான் அவர்கள் எனக்கு மூன்று டாலர்கள் செலவழிக்கிறார்கள்.
அந்தக் குழந்தை தன் உணர்ச்சியற்ற நிலை குத்திய கண்களால் என்னை விழுங்கி விடுவது போல் பார்த்தாள். அவளது முகம் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டவில்லை. அவள் அசைவற்று இருந்ததோடு உள்ளுக்குள் அமைதியாக இருந்தவளைப் போல் தோன்றினாள். அவள் அசாதரணமான சிறு அழகி. தோற்றத்திலோ ஒரு இளம்பசுவுக்கு நிகரான உறுதி. ஆனால் அவள் முகம் சிவந்திருந்தது. விரைந்து மூச்சுவிட்டாள். அவளுக்கு அதிக காய்ச்சல் இருந்ததை நான் புரிந்து கொண்டேன். அவளுக்கு அடர்த்தியான பொன்னிறக் கூந்தல். விளம்பரத் துண்டுக் காகிதங்களிலும் ஞாயிறு தினசரிகளில் நிழற்படப் பிரிவுகளிலும் தோன்றுகிற குழந்தைகளைப் போன்ற தோற்றம்.
மூன்று நாட்களாக அவளுக்கு காய்ச்சல் இருந்ததென்றும் ஆனால் எதனால் அந்தக் காய்ச்சல் எனத் தெரியவில்லை என்றும் அவள் தந்தை சொன்னார். மேலும் அவரது மனைவி மற்றவர்கள் செய்வது போலவே அவளுக்கு சில மருந்துகள் கொடுத்ததாகவும் ஆனால் அதனால் பலன் ஏதுமில்லையென்றும் என்னிடம் கூறினார். சுற்று வட்டாரத்தில் அதிகமான நோய்கள் இருப்பதால் நான் அவளைப் பரிசோதித்து என்னவென்று சொன்னால் நன்றாக இருக்குமென்றார்.
டாக்டர்கள் எப்பொழுதும் நடந்துகொள்வது போல் நான் சோதனை முயற்சியாக அவளுக்கு தொண்டை வலி இருந்ததா? எனக் கேட்டேன்.
“இல்லை”, “இல்லை” அவள் தொண்டை வலி இல்லை எனச் சொன்னதாக இருவரும் ஒரு சேரக் கூறினார்கள்.
உனக்குத் தொண்டை வலிக்கிறதா? என அந்தத் தாய் அவளிடம் கேட்டாள். ஆனால் அந்த சிறு பெண்ணின் முகத்தோற்றம் மாறவே இல்லை; அதே சமயம் என் முகத்திலிருந்து அவள் பார்வையை எடுக்கவே இல்லை.
நீங்கள் பார்த்தீர்களா எனக் கேட்டதற்கு அந்தத் தாய் தான் அதற்கு முயன்றதாகவும் ஆனால் பார்க்க முடியவில்லையென்றும் கூறினாள்.
அவள் மேலும் சொன்னாள்:-
இந்தச் சிறுமி செல்லும் பள்ளியில் ஒரு மாதமாக பலருக்கு தொண்டை அழற்சி நோய் கண்டிருந்தபடியால் எங்கள் அனைவருக்குமே சாதாரணமாக அந்நோய்தானோ என்ற எண்ணம் இருந்தது. ஆனாலும் இன்னும் ஒருவரும் அது பற்றிப் பேசவில்லை.
‘சரி’ முதலில் தொண்டையைப் பார்க்கலாம் என்றேன் நான். என் தொழிலுக்கே உரித்தான கனிவுடன் சிரித்துக் கொண்டே சிறுமியின் முதல் பெயரில் அவளை விளித்தேன். ‘மாடில்டா’, உன் வாயைத்திற உன் தொண்டையைப் பார்க்கலாம் என்றேன்.
ஒன்றும் நடக்கவில்லை
“ஆ” இதோ பார் என அவளத் தாஜா செய்து உன் வாயை நன்றாகத் திறந்து என்னைப் பார்க்கவிடு என்றேன். என் இரு கைகளையும் விரித்து இதோ பார் என்கைகளில் ஒன்றுமே இல்லை வெறுமனே வாயைத் திற நான் பார்க்கிறேன் என்றேன்.
எவ்வளவு நல்ல மனிதர்; பார்! அவர் உன்னிடம் எவ்வளவு அன்புடன் நடந்துகொள்கிறார். அவர் என்ன சொல்கிறாரோ அதைச் செய். அவர் உன்னைத் துன்புறுத்தமாட்டார் என அந்தத் தாய் கூறினாள்.
அப்பொழுது வெறுப்பில் என் பற்களை நறநறவென்று கடித்தேன். அந்தத் தாய் மட்டும் “துன்புறுத்துதல்” என்ற வார்த்தையை உபயோகிக்காமல் இருந்திருந்தால் நான் வேறு வழியைத் தேடியிருக்க வாய்ப்புண்டு. எனினும் நான் அவசரப்படாமல் தொந்தரவுக்கு ஆட்படாமல் அமைதியுடன் மெதுவாக அந்தச் சிறுமியை மீண்டும் நெருங்கினேன்.
எனது நாற்காலியை அவளருகே சற்று நகர்த்தியபோது சடேரென பூனைப் பாய்ச்சலாய் அவளது இரு கைகளும் இயல்பாக என் கண்களை நோக்கி வந்து கிட்டத்தட்ட அவற்றை அடைந்துவிட்டன. உண்மையில் எனது கண்ணாடியை அவள் தட்டிவிட்டதில் அது என்னிடமிருந்து பல அடிகள் தள்ளி சமையலறையில் விழுந்தது.
தாய் தந்தை இருவருமே சங்கடத்திலும் வருத்தத்திலும் நிலை குலைந்து விட்டார்கள். கெட்ட பெண்ணே! பார் நீ அந்த நல்ல மனிதருக்குச் செய்திருக்கும் காரியத்தை என அந்தத் தாய் சிறுமியின் ஒரு கையைப் பிடித்து ஆட்டியவாறே சொன்னாள்.
‘கடவுளே’ நான் நல்ல மனிதன் என்று அவளிடம் கூறவேண்டாம். நான் இங்கு வந்தது அவளது தொண்டையை பரிசோதிக்க. தொண்டை அழற்சியால் பாதிக்கப்பட்டு ஒருவேளை அவள் இறந்து போகவும் கூடும். ஆனால் அவளுக்கு அது ஒரு பொருட்டே அல்ல போல் தெரிகிறது. அந்தக் குழந்தையிடம் நான் சொல்வது உனக்குப் புரியுமளவுக்கு நீ பெரியவள், நீயாக வாயைத் திறக்கப் போகிறாயா அல்லது நாங்கள் உன் வாயைத் திறக்க வேண்டுமா?
அவள் அசையவே இல்லை. அவளது தோற்றத்தில் கூட மாற்றமில்லை. இருப்பினும் அவளது மூச்சு வேகமெடுத்தது. பிறகுதான் போராட்டம் ஆரம்பம். நான் அதை செய்ய வேண்டியதாகிவிட்டது. அவளைப் பாதுகாக்க நான் அவளது தொண்டையிலிருந்து ‘மாதிரி’ எடுக்க வேண்டும். ஆனால் முதலில் அவளது பெற்றோரிடம் நான் சொன்னேன் இதன் முடிவு அவர்களுடையது என்று. நான் இதிலிருந்த ஆபத்தை அவர்களுக்கு விளக்கி, “நான் தொண்டைப் பரிசோதனையை வலியுறுத்த மாட்டேன்”, நீங்கள் இதற்கு முழுப் பொறுப்பும் ஏற்றுக் கொண்டால் என்றேன்.
டாக்டர் சொல்வதை நீ கேட்கவில்லையென்றால் மருத்துவமனைக்கு நீ செல்ல வேண்டியிருக்கும் என அவளது தாய் அவளைக் கடிந்து கொண்டாள்.
ஓ? நான் சிரித்துக்கொண்டேன் நான் ஏற்கெனவே இந்த அடங்காப்பிடாரி சிறுமியிடம் அன்பு கொண்டுவிட்டேன். இந்தப் பெற்றோர்களை நான் இகழும்படியாகியது. இந்தப் போராட்ட சூழலில் அவர்கள் மேலும் மேலும் பரிதாபமாகி, நொந்துபோய், பலமிழந்துவிட்டார்கள். ஆனால் அதே சமயம் அவள் என்னைப் பற்றிய பயம் ஏற்படுத்திய வெறித்தனமான கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாள்.
அவளுடைய திடகாத்திரமான தந்தை அவரால் முடிந்தவரை முயன்றார். ஆனால் தனது மகள் என்கிற காரணத்தாலும் அவளது நடத்தையால் அடைந்த அவமானத்தாலும் தான் அவளைத் துன்புறுத்திவிடுமோ என்ற அதீத பயத்தாலும் அவளை அவர் நான் எனது முயற்சியில் கிட்டத்தட்ட வெற்றி பெறும் சமயத்தில் விட்டுவிட்டார். ஆனால் தனது மகள் தொண்டை அழற்சியால் பாதிக்கப்பட்டிருப்பாளோ என்ற பயத்தால் என்னை ‘விடவேண்டாம்’ விடவேண்டாம்’ என சொல்லியதுடன் அவர் கிட்டத்தட்ட மயக்க நிலைக்கு ஆட்பட்டார். அவளது தாயோ எங்களுக்குப் பின்னால் முன்னும் பின்னும் நகர்ந்து பயத்தில் பிறந்த வேதனையால் கைகளை உயர்த்திக் கொண்டும் தாழ்த்திக் கொண்டுமிருந்தாள்.
நான் அவருக்கு ஆணையிட்டேன்.
“அவளை உனக்கு முன்னால் மடியில் உட்காரவைத்து இரு மணிக்கட்டுகளையும் பிடித்துக்கொள்” என:-
ஆனால் அவர் அப்படிச் செய்ததும் அவள் அலறினாள். என்னைத் துன்புறுத்தாதே என் கைகளை விட்டுவிடு,விட்டுவிடு என்றாள். பின்னர் பயங்கர வெறியுடன் நிறுத்து நிறுத்து என்னை நீ கொல்கிறாய் என அலறினாள். அவளது அம்மா என்னிடம் ‘டாக்டர் இதனை அவள் தாங்குவாள் என நினைக்கிறீர்களா’ எனக் கேட்டாள்.
நீ வெளியே போ என மனைவியைப் பார்த்து கணவன் சொன்னதுடன், தொண்டை அழற்சியால் அவள் சாக, நீ விரும்புகிறாயா எனக் கேட்டார்.
வா இங்கே! இப்பொழுது அவளைப் பிடித்துக் கொள் என நான் கூறினேன்.
பின்னர் அவளது தலையை நான் எனது இடது கையால் பிடித்துக்கொண்டு ஒரு மரக் கரண்டியை அவள் பற்களுக்கிடையே வைக்க முயன்றேன். பற்களை இறுகப் பற்றிக்கொண்டு முரட்டுத்தனமாக சண்டையிட்டாள். ஆனால் இப்போது எனக்கும் கூட அவள் மேல் கோபம் மிகுந்தது. என்னை நான் கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றாலும் முடியவில்லை. எனக்குத் தெரியும் தொண்டையை எவ்வாறு பரிசோதிக்க முடியுமென்று. நான் என்னால் முடிந்ததைச் செய்தேன். இறுதியாக அவளுடைய கடைசி பற்களுக்குப் பின்னே அந்த மரக்கரண்டியை நான் வைத்தேன். அதன் முனை வாய்ப்பகுதிக்குச் செல்லும் தருணத்தில் ஒரு கண நேரம் அவள் வாயைத் திறந்தாள். ஆனால் நான் எதையும் காணும் முன்னாலும் மரக்கரண்டியை எடுக்கும் முன்பும் அவள் மீண்டும் முரண்டு பற்களுக்கிடையே மரக்கரண்டியை வைத்து நொறுக்கி விட்டாள்.
உனக்கு வெட்கமாயில்லை என அவள் அம்மா கத்தினாள். டாக்டர் முன் இதுபோல் நடந்து கொள்ள உனக்கு வெட்கமாக இல்லையா என மீண்டும் கேட்டாள்.
மிருதுவான கைப்பிடி கொண்ட ஒரு கரண்டியைத் தரும்படி அவள் அம்மாவிடம் கேட்டேன். இதை செய்துதான் ஆக வேண்டும். சிறுமியின் வாயிலிருந்து ஏற்கனவே ரத்தம் ஒழுக ஆரம்பித்துவிட்டது. அவளுடைய நாக்கு வெட்டுப்பட்டதால் வெறித் தனமாக கூச்சல் போட்டுக் கொண்டிருந்தாள். இந்த முயற்சியைக் கைவிட்டு நான் ஒரிரு மணி நேரம் கழித்து வந்திருக்கலாமோவென எண்ணினேன். சந்தேகமில்லாமல் அது நன்றாக இருந்திருக்கும். ஆனால் இரு குழந்தைகளாவது புறக்கணிப்பின் காரணமாக இறந்து போனதை நான் பார்த்திருந்தேன். இப்பொழுதே இது என்ன நோய் என்று கண்டறியாவிட்டால் எப்போதும் இதை கவனிக்க முடியாது என உணர்ந்தேன். இதில் மோசமான நிலை என்னவென்றால் நானும் கூட கொஞ்சம் வரம்பு மீறிவிட்டேன். எனக்கு வந்த கோபத்தினால் அச்சிறுமியை நாசப்படுத்தி அதனால் நான் மகிழ்ந்திருக்கக் கூடும். அவளை தாக்குவது மகிழ்ச்சி தரக் கூடியது. இதனால் எனது முகம் சிவந்துவிட்டது.
பாழாய்ப்போன இந்த தொல்லை தரும் சிறுமியின் அறியாமையிலிருந்து அவளைக் காக்க வேண்டும் என்றுதான் இது போன்ற சந்தர்ப்பங்களில் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வார்கள். மற்றவர்களையும் அவளிடமிருந்து காக்கவேண்டும். அது ஒரு சமூகக் கட்டாயம். மேலும் இவையெல்லாமே உண்மை. ஆனால் கண்மூடித்தனமான கோபம், பெரியவர்களுக்கேற்பட்ட அவமானம், தசை முறுக்கு தளர்வதற்கான ஆர்வம் இவையெல்லாம்தான் ஆட்டுவிக்கின்றன. முடிவை நோக்கி போய்த்தான் ஆகவேண்டும்.
முடிவாக வரம்பு கடந்த ஒரு நடவடிக்கையை மேற்கொண்டு அவளது கழுத்தையும் தாடைகளையும் என் பிடிக்குள் கொண்டுவந்தேன். ஒரு கனமான வெள்ளிக் கரண்டியை அவள் பற்களுக்குப் பின்னாலும் தொண்டைக்குக் கீழேயும் அவள் வாயைத் திறந்தபடி வைத்திருக்குமாறு செருகினேன். அதோ அங்கே அவளது தொண்டையிலுள்ள உள்நாக்கை ஜவ்வு மூடியிருந்தது. இந்த ரகசியத்தை நான் அறியாமலிருக்க மிக்க தீரத்துடன் போராடியிருக்கிறாள். தற்பொழுது நடந்தவற்றை தவிர்ப்பதற்காக இந்த தொண்டை வலியை மூன்று நாட்களாக மறைத்து அவள் தன் பெற்றோரிடம் பொய் கூறியிருக்கிறாள்.
இப்பொழுது உண்மையிலேயே அவள் சீற்றம் கொண்டுவிட்டாள். இதற்கு முன் இதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றவள் தற்போது தாக்கத் தொடங்கிவிட்டாள். தன் தந்தையின் மடியிலிருந்து எழுந்து என்னை அடிக்க முயன்றாள். ஆனால் தோல்வியின் கண்ணீர் அவள் பார்வையை மறைத்துவிட்டது.

Short Story “The Use of Force” by William Carlos Williams

Translated in Tamil by M. Karthikeyan

Advertisements
This entry was posted in Translated short story and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s